சென்னை புறநகர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் பிடித்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கம் வீரபத்திரநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த 1ம் தேதி வீட்டு வாசலில் இரவு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வழக்கம்போல் உறங்க சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதே நாளில் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரின் இருசக்கர வாகனமும் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.
அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடு போனதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
திருட்டு நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடி வி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் வாகனத்தை திருடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
பின்னர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய தனிப்படையினர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகனை கைது செய்து விசாரித்ததில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை தனது நண்பர் சிவக்குமாருடன் சேர்ந்து திருடியதை ஒப்புக்கொண்டார்.
மோகன் மீது பள்ளிக்கரணை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகளில் சிறைக்கு சென்றதும், அதேபோல் சிவக்குமார் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பழைய வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.