நாகை அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 98 தரமற்ற நெல் மூட்டைகளை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி ஊராட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் ஆந்தக்குடி – புதுபத்தூர் சாலையில் சண்முகா வணிக வளாகம் என்ற பெயரில் நெல் கொள்முதல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 29 ம்தேதி மாலை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் சண்முகா வணிக வளாகத்தை கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார்,தேவூர் வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் செல்வேந்திரன் மற்றும்
நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகள் இடம் இருந்து வாங்கி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக புதிய சணல் சாக்குகளை கொண்டு தரமற்ற தூய்மை செய்யப்படாத , ஈரப்பதம் அதிகம் உள்ள 41.600 கிலோ எடை கொண்ட 98 நெல் மூட்டைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசால் வழங்கப்படும் சணல் கொண்டு தைக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் விக்னேஷ்வரன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புதிய சாக்குகளை கொண்டு நெல் மூட்டைகளை காக்கழனி, திருக்குவளை தாலுகா நீர்முலை, ,திருவாய்மூர், ததிருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. எனவே 98 நெல் மூட்டைகளை பறிமுதல் செய்த வட்டாட்சியர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நெல் மூட்டைகளை ஆந்தக்குடி கிராம நிர்வாக அலுவலர் இடம் ஒப்படைத்தனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.