ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த குமிட்டாபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்து வரும் மூன்றாவது நாளில் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பருவ மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், கிராம மக்கள் நோயிலிருந்து காக்கவும் மற்றும் கால்நடைகளை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும் பாரம்பரியாக இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓருவர் மீது ஒருவர் சாணி உருண்டைகளை வீசி விளையாடுவர்.

இதன்படி நேற்று குமிட்டாபுரம் பீரேஸ்வரர் கோவிலில் சாணியடி திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது. இதனையொட்டி, கிராம மக்கள் கோவில் குளத்தில் பீரேஸ்வரர் உற்வருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கழுதை மீது ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர்கள் மூலம் கோவில் வளாகத்தில் கொண்டு வரப்பட்ட மாட்டு சாணத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் மேலாடை அணியாமல் ஒருவர் மீது ஒருவர் சாணி உருண்டைகளை வீசி மகிழ்ச்சி பொங்க விளையாடினர். இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து, இந்த சாணிகளை பொதுமக்கள் சேகரித்து, தங்களது விளை நிலங்களுக்கு உரமாக இட்டனர். இதனால் பயிர்கள் செழித்து வளரும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.