சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் .இவர் அம்பத்தூர் எஸ்டேட் சர்வீஸ் சாலையில் உள்ள நடேசன் தெருவில் இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள வங்கியில் 2,35,000 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வாகனத்தில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனது செல்போனுக்கு அழைப்பு வந்ததை அடுத்து இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து ஒரே வாகனத்தில் வந்த மூவரில் ஒருவன் பணம் கீழே கிடக்கிறது என கூறி திசை திரும்புகிறான்.
இதனை நம்பி தன் பணம்தான் என அவர் எடுக்கும்போது அந்த நபர் இங்கும் பணம் சிதறி உள்ளது என கூறி சற்று மறைவான இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார்.
அதற்குள் அவர்களுடன் வந்த மற்றொரு நபர் தாமஸின் இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு கீழிருந்து பணத்தை லாவகமாக திருடிக்கொண்டு தயாராக காத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விடுகிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு குற்றவாளியை தேடி வருகின்றனர்.