தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகும், நடிகராகவும் பிசியாக வலம் வருகின்றார் உதயநிதி. மேலும் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்படும் உதயநிதி தற்போது பல படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகின்றார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத்தலைவன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை மாதம் தவறாமல் இவர் விநியோகம் செய்யும் படங்கள் ரிலீசாகி வருகின்றன. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, தனுஷின் நானே வருவேன், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் என இந்த ஓராண்டு இடைவெளியில் ரிலீசான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவற்றை இவர் தான் விநியோகம் செய்திருந்தார்.
இவர் விநியோகம் செய்த படங்களில் ஒரு சில தோல்வியை தழுவி இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களாகவே இருந்தன. இதனால் கடந்த ஓராண்டில் இவர் வெளியிட்ட படங்கள் மொத்தமாக ரூ.1200 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளன. லாபத்தில் இருந்து 10 சதவீத தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படங்களை விநியோகம் செய்கின்றன.

அப்படி பார்த்தால் இந்த ஒரு ஆண்டு காலகட்டத்தில் மட்டும் அந்நிறுவனத்துக்கு ரூ.120 கோடி லாபமாக கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஒரு ஆண்டு இடைவெளியில் விநியோகஸ்தராக உதயநிதிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்துள்ளது