குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரையும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவையைக் கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நவீன ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தை சுமார் 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். இந்த நிலையில், இந்த ரயில் மூன்றாவது முறையாக மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காந்திநகர் நோக்கி இன்று காலை வந்தே பாரத் ரயில் சென்றுகொண்டிருந்தது. காலை 8:17 மணி அளவில் அதுல் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்த காளை மாடு மீது ரயில் மோதியது. இதனால் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்றது. வந்தே பாரத் ரயில் மாடு மோதி விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.