திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் பிரசித்தி பெற்றவர். இந்த ஆலயத்தில் சனிக்கிழமை தோறும் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம் இதில் வேளுக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்த கோவிலில் வீற்றிருக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ராமர் கருடாழ்வார் சேனை முதலியார் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய மூலஸ்தானங்கள் மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவற்றிற்கு திருப்பணிகள் நடைபெற்ற முடிந்தது.
இதனையடுத்து கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய இந்த ஆலய குடமுழுக்கு விழா தொடர்ந்து யாகசாலை பிரவேசம் முதல் கால பூர்ணாகதி ஆகியவை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஐந்தாம் கால பூர்ணாஹூதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று பிரசன்ன வெங்கடேச பெருமாள் வீர ஆஞ்சநேயர் ராஜகோபுர விமானங்களுக்கு கடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் மீது கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு மலர் தூவப்பட்டது .
இந்த நிகழ்வில் வேளுக்குடி மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர்.குடம்புளி மற்றும் திருப்பணிக்கான ஏற்பாடுகளை சனிக்கிழமை வார வழிபாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜமுருகன் தலைமையில் உள்ள குழுவினர் மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.