விஜய் பீஸ்ட் படத்தைத்தொடர்ந்து தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார் ராஷ்மிகா. அதைத்தொடர்ந்து சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
வாரிசு படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெற்றிப்படம் என்பதாலும், லோகேஷ் கடைசியாக இயக்கிய கமலின் விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதாலும் தளபதி 67 படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் வாரிசு மற்றும் தளபதி 67 படங்களை தொடர்ந்து தளபதி 68 படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகின்றது. அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகின்றார்.
மேலும் இப்படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்தை மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் 300 கோடி செலவில் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.