இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பேட்ஸ்மேன் விராட் கோலி உலகளவில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். சதங்கள் அடிப்பதில் பெயர்பெற்ற கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. மேலும் அவரது ஆட்டமும் முன்பு போல் இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த விமர்சனங்கெளுக்கெல்லாம் கோலி சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையின் மூலம் பதிலளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் சதம் விளாசி அசத்தினார் கோலி. இந்நிலையில் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த கோலி கிரிக்கெட்டுக்கு வெளியேயும் சாதனைகளை படைத்து, தான் ஒரு சாதனை நாயகன் என மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறார் கோலி.

விராட் கோலியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம், டுவிட்டரில் 5 கோடி ஃபாலோயர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள கோலி, சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ள 3வது விளையாட்டு வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்த பட்டியலில் கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.