நமது உடல் இயக்கத்தின் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு ஓரிரு நாட்கள் கடுமையான வலியுடன் நம்மைப் படுத்தி எடுத்துவிடும்.
எதனால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது? அவை குணமாக என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது !

உடற்பயிற்சி, குனிந்து கனமான பொருளை தூக்குதல் போன்ற செயல்களால் தசைகளில் திடீரென சுருக்கம் ஏற்பட்டு வலியை தந்து கொண்டிருக்கும். இது பொதுவாக இடுப்பு, தொடை, கை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். தசைகளில் உண்டாகும் நீர்க்குறைவு, தாது உப்புகளின் அளவு குறைவது, வறட்சி, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, வாயு நிறைந்த உணவுப் பொருட்கள், அதிகக் காரம், மசாலா வகைகளை உண்பது போன்றவையும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.
பொதுவாக அனைவருக்கும் தசைப்பிடிப்பு ஏற்பட்டாலும் வயோதிகர்கள், அதிக எடை கொண்டவர்கள்,விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும்.
தசைப்பிடிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியவை :

பொறுத்துக்கொள்ளக் கூடிய நம் பணிகளை கவனிக்க முடியும் என்கிற அளவு தான் வலி இருக்கிறது என்றால் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். நீங்களாக வலி நிவாரணிகளை உட்கொள்ள தேவையில்லை. தசைப்பிடிப்பு ஏற்பட்டு 48 – 72 மணி நேரத்திற்குள் ஆகிறது எனில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என 20 நிமிடம் ஐஸ்பேக் ஒத்தடம் தரலாம். நேரடியாக ஐஸினை தோலில் வைத்து தடவக்கூடாது.

72 மணிநேரத்திற்கு மேல் எனில் அகலமான டப்பில் வெந்நீரை ஊற்றிவிட்டு அதில் இறங்கி உட்கார்ந்துகொள்ளுங்கள். படுத்துக்கொண்டு கால்களை தூக்குவதால் முதுகுத்தண்டில் இருக்கும் அழுத்தம் நீக்கப்பட்டு வலி போகும். அப்போதும் வலி விடவில்லை எனில் மருத்துவரை சந்திப்பது நல்லது. ஐஸ் ஒத்தடம் வீக்கத்தை குறைக்கும், வெந்நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசைப்பிடிப்பை தவிர்க்க போதுமான அளவு நீர் அருந்துங்கள்