மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தான் ‘ஓணம்’. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருதப்படுகின்றது.

மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலிக்கு அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாக படைத்தார்.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.