குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள கேபிள் பாலத்தை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் இந்த தொங்கும் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று மாலை நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் கடந்து சென்றுக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் திடீரென்று அறுந்து விழுந்தது. இந்த பெரும் விபத்தில் பாலத்தில் இருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இன்று அதிகாலை நிலவரப்படி 177 பேர் மீட்கப்பட்டதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 140ஐ தாண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் தற்போது ஏக்தா நகரில் உள்ளேன். ஆனால், என் மனதோ மோர்பி தொங்கு பால விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை எண்ணிக்கொண்டே உள்ளது; என்னுடைய வாழ்க்கையிலேயே, இதுபோன்ற வேதனையை அனுபவித்ததில்லை; ஒருபுறம், மனதில் வலி உள்ளது.. மறுபுறம் கடமை இருக்கிறது” என்று பதிவிட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த பாஜக பேரணியை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். மேலும் பிரதமர் மோடி இன்று விபத்து நடந்த பகுதிக்கு நேரில் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
விபத்தில் காணாமல் போனவர்களை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.