திருவாரூர் மாவட்டம் பெருமங்கலம் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத யோக நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத யோக நரசிம்மர் தெற்கு நோக்கி தனி ஆலயமாக அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது.இந்த யோக நரசிம்மர் ஆலயம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து வழிபாடு இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஆலயத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டத் தொடங்கி தற்போது ஆலய பணி முடிந்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.முன்னதாக கடந்த 29.ஆம் தேதி நரசிம்ம சுதர்சன ஹோமத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வு தொடர்ந்து ஒன்றாம் கால யாக பூஜை,இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று பூர்ணாகதி நிறைவு பெற்ற பின்பு புனித நீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று ராஜ கோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலசத்தில் ஊற்றப்பட் புனித நீர் ஆலயத்தை சுற்றி இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு நிகழ்வானது கொட்டும் மழையில் நடைபெற்றது. பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடியும் மழையில் நனைந்தபடியும் குடமுழுக்கை கண்டுகளித்தனர். இந்த நிகழ்விற்கு பெருமங்கலம் மட்டுமல்லாது சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.